×

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு தான் இந்தியாவின் வளர்ச்சியா? கே.எஸ்.அழகிரி கேள்வி

ஆலந்தூர்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதுதான் இந்தியாவின் வளர்ச்சியா, என்று ஒன்றிய அரசை கண்டித்து சின்னமலையில் நடந்த ஆர்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். அதானியின் பங்குச்சந்தை ஊழல்களுக்கு துணை போகும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் சின்னமலையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், அசன் மவுலானா, பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலிட பார்வையாளர் ஸ்ரீவல்லபிரசாத் ஆர்பாட்டத்தினை தொடக்கி வைத்தார். அப்போது பாஜவிற்கு எதிராகவும், அதானிக்கு எதிராகவும் கோஷங்களை காங்கிரசார் எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
பாஜ அரசின் தவறான போக்கினை கண்டித்து இந்த ஆர்பாட்டம் இந்தியா முழுவதும் நடக்கிறது. இது இங்குள்ள ஆளுநருக்கு கேட்க வேண்டும். மோடி ஆட்சியில் தனி நபர்களுக்கு, பண முதலாளிகளுக்கு சலுகை வழங்கினார் என பலரும் பேசினார்கள். கார்பரேட் நிறுவனங்கள் இயல்பாக வளர்ந்தார்கள் அல்லது வீழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் மோடி ஆட்சியில் தனிநபரான அதானி, அவரது நண்பர்கள் வளர்ந்தார்கள். இந்தியா வீழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியா வளர்ச்சிப் பாதையை அடைந்துள்ளதாக  மோடி சொல்கிறார். 2014ம் ஆண்டுக்குப் பிறகு, எந்த துறையில் நாடு வெற்றிபெற்றது என மோடி விளக்க வேண்டும். இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் குறைந்துள்ளது. அப்போதிருந்த 9.6 சதவீத ஜிடிபி வளர்ச்சியினை 10 சதவீதமாக உயர்த்திவிட்டோம் என அவர் சொல்லமுடியுமா. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல் விலை ரூ.70 ஆகவும், சமையல் எரிவாயு ரூ.400 ஆகவும் இருந்தது. இப்போது பெட்ரோல் ரூ.100க்கு மேலாகவும், சமையல் எரிவாயு ரூ.1,200க்கும் விற்கப்படுகிறது. இதுதான் இந்தியாவின் வளர்ச்சியா. ராகுல்காந்தியின் நடைபயணத்தில் பொதுமக்களும் பங்கேற்றதால் இந்த பயணத்தைக் கண்டு பாஜவினர் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் முத்தரசன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், ரஞ்சன்குமார் டில்லிபாபு, துரை, காங்கிரஸ் உறுப்பினர் சுமதி அன்பரசு, கனிபாண்டியன், ஆர்.பகத்சிங், இலக்கியப் பிரிவு மாநில தலைவர் புத்தன், பிராங்ளின் பிரகாஷ், மண்டலத் தலைவர்கள் ஆதம் ரமேஷ், ஏ.வி. தனசேகரன், கோகுலகிருஷ்ணன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags : Union Government ,India ,K.K. ,S.S. ,Anakiri , Congress protest condemning the Union Government Is the increase in petrol, diesel and gas cylinder prices India's growth? KS Alagiri question
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...